டி.வி.டி. பிளேயரில் மறைத்து ரூ.17 லட்சம் தங்கம் கடத்தல்


டி.வி.டி. பிளேயரில் மறைத்து ரூ.17 லட்சம் தங்கம் கடத்தல்
x
தினத்தந்தி 31 Oct 2022 6:50 AM GMT (Updated: 31 Oct 2022 6:54 AM GMT)

துபாயில் இருந்து சென்னைக்கு டி.வி.டி. பிளேயரில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

துபாய் விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

டி.வி.டி. பிளேயரில் தங்கம்

அதில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கைப்பற்றினார். அதில் இருந்த டி.வி.டி. பிளேயரை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தபோது அதற்குள் தங்க தகடு மறைத்துவைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

உள்ளாடைக்குள்...

அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னை வாலிபரை சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.23 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 525 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள 910 கிராம் தங்கமும், ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள்,

இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story