சென்னை மார்க்கெட்டுகளில் மண் பிள்ளையார் சிலைகள் விறுவிறு விற்பனை


சென்னை மார்க்கெட்டுகளில் மண் பிள்ளையார் சிலைகள் விறுவிறு விற்பனை
x

மண் பிள்ளையார் சிலைகள் ரூ.40 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் வீட்டில் உள்ள நபர்கள் கரைப்பது வழக்கம். அல்லது, தங்கள் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய வடிவிலான பிள்ளையார் சிலைகள் கரைக்க கொண்டு செல்லும் போது, அந்த வாகனங்களில் இந்த மண் பிள்ளையார்களையும் சேர்த்து அனுப்பி விடுவார்கள்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு, புரசைவாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர், மூலக்கடை உள்ளிட்ட பிரதான மார்க்கெட் பகுதிகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகள் விற்பனைக்கு வந்தன. இந்த சிலைகள் ரூ.40 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை மாலை வரை விறுவிறுப்பாக விற்பனையாகும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு சிலர் நேற்றே மண் பிள்ளையார் சிலைகளை வாங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

இதே போன்று, விநாயகர் சதுர்த்தி விழா வழிபாட்டில் வைக்கப்படும் பிரதான பொருட்களான கரும்பு, விளாம்பழம், கம்பு மற்றும் சோளம் போன்றவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தன. மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்கள் வியாபாரம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை திடீரென பெய்த மழை காரணமாக விற்பனை மந்தமானதாக பூ மற்றும் பழக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

எனினும், விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பூ மற்றும் பழங்கள் விற்பனை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story