மண்டைக்காடு சமய வகுப்பு மாநாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்
மண்டைக்காடு சமய வகுப்பு மாநாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசிக் கொடை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது போல, மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு, மாசிக் கொடையின்போது, பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும், பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபடுவதால், பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் ஹைந்தவ சேவா சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், ஹைந்தவ சேவா சங்கம் அரங்கம் அமைத்து 1936-ம் ஆண்டு முதல் மாசிக் கொடை விழாவின்போது, இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
தடையை நீக்க வேண்டும்
86-வது ஆண்டாக மண்டைக்காடு இந்து சமய மாநாடு, மார்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை, ஹைந்தவ சேவா சங்கம் இந்த மாநாட்டை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளதாக தெரியவருகிறது.
85 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் சமய மாநாட்டை, எந்த காரணமும் இல்லாமல் தடுக்க முயல்வது, தி.மு.க. அரசின் இந்து மத விரோதப் போக்கையே காட்டுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை என்பது ஆலய மேம்பாட்டுக்கே தவிர, ஆளுங்கட்சியின் கொள்கைகளைப் புகுத்துவதற்கல்ல என்பதை, தி.மு.க. அரசு உணர வேண்டும் என்பதை தெரிவிப்பதோடு, உடனடியாக மண்டைக்காடு கோவிலில் நடக்கும் 86-ம் ஆண்டு சமய வகுப்பு மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.