மெரீனா கடற்கரை: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை


மெரீனா கடற்கரை: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
x

மெரீனா கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

சென்னையில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக, மாநகராட்சியின் சார்பில் கடற்கரை பகுதிகளில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் தினசரி 2 வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மெரீனா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தைச் சார்ந்த நபர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 16 நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்களை கண்காணித்து அபராதம் விதிப்பதுடன், விழிப்புணர்வும் அளிக்க உள்ளனர். கடந்த 15 நாட்களில் மெரீனா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 100 அபராதமும், பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.12 ஆயிரத்து 300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் பொழுது, அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா கடற்கரையை உருவாக்க தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story