இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தர்மபுரியில் 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தர்மபுரியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இலவச திருமணம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அதன்படி சேலம் இணை ஆணையர் மண்டலத்துக்குட்பட்ட தர்மபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக நேற்று 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவிலில் நடைபெற்றது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் அந்தந்த மணமக்களின் உறவினர்கள் முன்னிலையில் 5 ஏழை ஜோடிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 5 ஏழை ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா மற்றும் மணமக்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கும் விழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
30 வகை சீர்வரிசை
விழாவுக்கு அறநிலையத்துறை சேலம் மண்டல நகை சரிபார்ப்பு இணை ஆணையர் சபர்பதி தலைமை தாங்கினார். தர்மபுரி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உதயகுமார் முன்னிலை வகித்தார். அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் வரவேற்று பேசினார்.
விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு 30 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினர். விழாவில் கோவில் ஆய்வாளர்கள் சங்கர், மணிவண்ணன், சங்கர் கணேஷ், பெரமன், கோமதி, துரை, கோட்டை கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமாரசாமிப்பேட்டை கோவில் செயல் அலுவலர் ராதாமணி நன்றி கூறினார்.