அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா


அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மக பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதைமுன்னிட்டு மகா சிவராத்திரி பூஜை, கோ பூஜை, விநாயகர் பூஜை, கொடியேற்றம் மற்றும் இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி, காப்பு அணிதல் நிகழ்ச்சி, அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்றுகாலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து மயான கொள்ளை அம்மன் பத்ரகாளி அலங்காரத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே 9 வேடங்களுடன் கரகாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது. இதில் மணலூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆகிய 3 நாட்கள் இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. பின்னா் 23-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா காட்சியும், குடல் பிடுங்கி மாலை அணியும் நிகழ்ச்சி, பம்பை சிலம்பாட்டமும் நடைபெறுகிறது. 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தென்பெண்ணை ஆற்றில் இருந்து அக்னி கரகம் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும், சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி திருத்தேர் வடம் பிடித்தல், 25-ந் தேதி(சனிக்கிழமை) நிறையணி, 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, காப்பு கலைதல் மற்றும் பாவாடைராயனுக்கு கும்பம் கொட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள், ஆலய பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் முன் நின்று செய்து வருகின்றனர்.


Next Story