கொத்தனார் அடித்துக் கொலை
கொத்தனார் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மலைக்கோட்டை:
சரமாரியாக தாக்கினர்
திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராமனின் மகன் சக்திவேல்(வயது 35). கொத்தனாரான இவர் கிடைக்கிற கூலி வேலைகளையும் செய்து வந்தார். காவிரி பாலத்தின் அடிப்பகுதியில் தற்போது சிறு, சிறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில், வெளியூரில் இருந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு ஒரு தொழிலாளர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடியதாக நேற்று முன்தினம் நள்ளிரவு சக்திவேலை, 5 பேர் சேர்ந்து காவிரி பாலத்திற்கு கீழே அழைத்து சென்று தாக்கியுள்ளனர். சரமாரியாக தாக்கியதில் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.
5 பேர் கைது
இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக பாலம் வேலை செய்யும் தொழிலாளர்களான கடலூர் மாவட்டம் வேப்பூர் என்.நாரையூரை சேர்ந்த சடையமுத்துவின் மகன்கள் வடிவேலு (29), அய்யப்பன் (31), செல்வக்குமார் மகன் ஜெயசூர்யா (21), கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முனுசாமி மகன் திருமலை (23), கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எடசத்தூர் பகுதியை சேர்ந்த சாமிதுரை மகன் சரத்குமார் (27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
மேலும் அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போன் மற்றும் பணத்தை திருடியதால் கொத்தனாரை ஆத்திரத்தில் அடித்துக் கொன்றதாக, அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.