மேயர் பிரியா கார் பயணம்: 'ஆணுக்கு நிகர் பெண்' துணிச்சலான பணிகளை விமர்சிப்பது தேவையற்றது - அமைச்சர் சேகர்பாபு


மேயர் பிரியா கார் பயணம்: ஆணுக்கு நிகர் பெண் துணிச்சலான பணிகளை விமர்சிப்பது தேவையற்றது - அமைச்சர் சேகர்பாபு
x

மேயர் பிரியா காரில் பயணித்தது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் நேற்று முன் தினம் சென்னை காசிமேட்டிற்கு சென்றார். அப்போது, முதல்-அமைச்சர் கான்வாயில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சுங் உள்ளிட்ட சிலர் காரில் தொங்கியபடி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கான்வாயில் மேயர் பிரியாவின் கார் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், சாதாரண சூழ்நிலையில் அவர்கள் அடுத்த இடத்தில் முதல்-அமைச்சர் பயணிக்கின்ற அந்த பகுதிக்கு செல்லவேண்டிய காரணத்தினால் அந்த வானத்தில் ஏறி இருக்கிறார்.

அதுவும் அவர் (மேயர் பிரியா) பயணித்த அந்த வாகனத்தில் முதல்-அமைச்சர் பயணிக்கவில்லை. அது பாதுகாப்பிற்கு வந்த வாகனம். அதுவும் அந்த பாதுகாப்பிற்கு வந்த காவலர்களை கிழே தள்ளிவிட்டு ஏறவில்லை.

ஏதோ ஒரு அச்சந்தர்பத்தில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது. அவரும் மேயர்... அரசு சார்புடைய ஒரு அரசு ஊழியர் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். இதை திட்டமிட்டு அதிகார துஷ்பிரயோகமாக பார்க்கக்கூடாது.

முதல்-அமைச்சர் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அந்த இடத்தில் முதல்-அமைச்சருடன் இருக்க வேண்டும் என்ற துடிப்போடு நடந்த செயல் இதை ஊடகங்கள் தான் பெரிதாக்குகின்றன.

ஒரு பெண்மணி கூட இவ்வளவு விரைவாக 'ஆணுக்கு நிகர் பெண் என்று கும்மியடி' என்ற பாரதியுடைய பிறந்தநாள் நடந்துகொண்டிருக்ககூடிய இந்த காலத்தில் இப்படிப்பட்ட துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்ட வேண்டுமே தவிர அதை விமர்சிப்பது தேவையற்ற ஒன்று' என்றார்.


Next Story