நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட மாணவி பலி:கெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல்


நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி பலி:கெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல்
x

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து 67 ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போதுகெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

ஓட்டல்களில் சோதனை

நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்த மாணவி கலையரசி (வயது 14) ஒரு ஓட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

மாணவி பலியானதை தொடர்ந்து நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இறைச்சி பறிமுதல்

சேலம் அழகாபுரம், புதிய பஸ் நிலையம் அருகே மற்றும் அத்வைத ஆசிரம ரோட்டில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் மாநகர நல அலுவலர் யோகானந்த் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 33 ஓட்டகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போன 182 கிலோ சிக்கன் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர துரித உணவுக்காக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 17 கிலோ அரிசி சாதம், 500 கிராம் மைனஸ், 2 கிலோ சவர்மா மற்றும் 18 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இதுதொடர்பாக 10 ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் 4 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சோதனை தொடரும்

இதேபோல் ஆத்தூரில் 26 ஓட்டல்களிலும், எடப்பாடியில் 8 கடைகளிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த்னர். அப்போது ஓட்டல்களில் இருந்து 84 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 4 ஓட்டலுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story