படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்

கடலூர்

நெல்லிக்குப்பம்

அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

அண்ணாகிராமம் வட்டாரத்தில் மேல்குமாரமங்கலம், ஒறையூர், நல்லூர்பாளையம் ஆகிய கிராமங்களில் மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்டு 15-20 நாட்கள் பயிராக உள்ளது. ஒரு சில இடங்களில் 40 நாட்கள் பயிராகவும் உள்ளது. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. படைப்புழுவினால் ஆன பாதிப்பை கட்டுப்படுத்த மக்காச்சோளத்தின் பருவத்திற்கேற்ப பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதைப்பு செய்த 15-20 நாள் பயிருக்கு குளோரான்டரினிலிபுரோல் 18.5 எஸ்.சி 4 மி.லி., 10 லிட்டர் தண்ணீர் அல்லது புளுபென்டமைடு 480 எஸ்.சி. 4மி.லி, 10லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பானால் மட்டுமே பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். விதைப்பு செய்த 35-40 நாள் பயிராக இருப்பின் எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி. 4 கிராம், 10 லிட்டர் தண்ணீர் அல்லது ஸ்பைனிடிரோம் 11.70 எஸ்.சி. 5 மி.லி, 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் படைப்புழு தாய் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்க ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். சூரிய சக்தி விளக்கு பொறி ஏக்கருக்கு 1 என்ற அளவில் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம். மேற்காணும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு படைப்புழு தாக்கத்திலிருந்து மக்காச்சோளம் பயிரினை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story