உண்மை கண்டறியும் சோதனை நடத்த 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை


உண்மை கண்டறியும் சோதனை நடத்த 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை
x

உண்மை கண்டறியும் சோதனை நடத்த 12 பேருக்கு மருத்துவ பரிசோதனைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி

ராமஜெயம் கொலை

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தமிழகம் முழுவதும் 1,500 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்கள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இருந்தால் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

13 பேர் ஆஜர்

அதன்படி சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந் தேதி திருச்சி 6-வது ஜே.எம். கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையில் எதிர்தரப்பு வக்கீல்கள் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் போலீஸ் சூப்பிரண்டு மனு தாக்கல் செய்ய முடியும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

உண்மை கண்டறியும் சோதனை

இதையடுத்து அன்று சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் புதிதாக மனு தாக்கல் செய்தார். அப்போது ஆஜரான 13 பேரின் வக்கீல்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்ததால் விசாரணை 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

தென்கோவன் என்ற சண்முகம் மட்டும் தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்தார். மற்ற 4 பேர் ஆஜர் ஆகவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை 17-ந்தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு, மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

மருத்துவ அறிக்கை தாக்கல்

அதன்படி நேற்று காலை மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, 14-ந்தேதி ஆஜர் ஆகாத 4 பேரும் நேற்று மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தென்கோவன் என்ற சண்முகம் தவிர உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான அறிக்கை மற்றும் சான்றிதழை வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவிட்டர்.

மேலும், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை அன்று தெரிவிப்பதாக கூறி விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரில் கடலூர் சிறையில் உள்ள செந்திலுக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் 3 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் நடத்தப்படும்

வருகிற 21-ந்தேதி உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தவுடன், டெல்லியில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, 12 பேருக்கும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலங்காத நிலையில், இந்த உண்மை கண்டறியும் சோதனையிலாவது துப்பு கிடைக்குமா? என்று பொதுமக்களும், போலீசாரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தியேட்டரில் விசாரணை

இதற்கிடையே சிறப்பு புலனாய்வு குழு போலீசார் திருச்சியில் உள்ள காவேரி தியேட்டரில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு தியேட்டர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதாக புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

காலை தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது. மேலும் அந்த தியேட்டர் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டரை கடந்த 2011-ம் ஆண்டுதான் அந்த நிறுவனம் வாங்கியதாக கூறப்படுகிறது. காவேரி தியேட்டரில் நடந்த விசாரணை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ெஜயகுமாரிடம் கேட்டபோது, இது சாதாரண விசாரணைதான் என்று தெரிவித்தார்.


Next Story