குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கக்கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கக்கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மக்களை தேடி மருத்துவ பணியில் கிராமம் தோறும் சென்று மக்களுக்கு மருத்துவம் சம்மந்தமாக ரத்த அழுத்தம் பார்ப்பது, சர்க்கரை நோயாளிகளை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு பணிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 303 பெண் தொழிலாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ஊதியமாக வெறும் ரூ.4,500 வழங்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் என பணியாற்றினால் போதும் என்றனர். இப்போது காலை முதல் இரவு வரை வேலை வாங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரும் 25 குக்கிராமங்களை கவனிக்கின்றனர்.
போக்குவரத்துக்காக மாதம் பெட்ரோலுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வரை செலவு ஆகிறது என்றும் இப்படி 4 ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பிரதிமாதம் 5-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும், சீருடை, அடையாள அட்டை, கைபேசி வழங்க வேண்டும், போக்குவரத்து படி, உணவு படி வழங்க வேண்டும், ஊழியர்களின் ஊதியத்தை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.