மருத்துவ மாணவி தற்கொலை சம்பவம்:கைதான பேராசிரியரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி


மருத்துவ மாணவி தற்கொலை சம்பவம்:கைதான பேராசிரியரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

மருத்துவ மாணவி தற்கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தூத்துக்குடி வி.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், வியாபாரி. இவருடைய மகள் சுகிர்தா (வயது 27). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதியில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் மாணவி சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் குலசேகரம் போலீசார் கைப்பற்றினர்.

அதில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும் எழுதியிருந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

மனு தாக்கல்

பின்னர் 13-ந் தேதி பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நேற்றுமுன்தினம் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பரமசிவத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, விசாரணையை 19-ந் தேதிக்கு (அதாவது நேற்று) தள்ளி வைத்தார்.

விசாரணை

இந்தநிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது பாளையங்கோட்டை சிறையில் இருந்து பேராசிரியர் பரமசிவம் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சீனியர் மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ப்ரீத்தி ஆகியோர் மதுரை ஐகோாட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.


Next Story