மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் ராஜாமுகமது, சுப்பிரமணியன், சரவணன் மற்றும் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை
மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும். தற்போது வழங்கும் ஊக்கத்தொகையை நேரடியாக ஊழியர் வங்கி கணக்கில் அரசே செலுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஊக்கத்தொகையை மாதாமாதம் தாமதமின்றி வழங்கிட வேண்டும். ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை அனைவருக்கும் கிடைக்கத்தக்க வகையில் மாறுதல் செய்திட வேண்டும். முதலில் அறிவித்த ரூ.ஆயிரத்தை உடனே கிடைக்க அறிவிப்பு செய்திட வேண்டும். பயணப்படி, உணவுப்படி உள்ளிட்ட சிறப்புப்படி வழங்கிட வேண்டும். ஊழியருக்கு மகப்பேறு கால சலுகை வழங்கிட வேண்டும்.
ஊழியர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி அளித்து சான்றுகள் வழங்கிட வேண்டும். இஎஸ்ஐ, பி.எப்., சட்டங்களை அமல்படுத்திட வேண்டும். பணிநேரத்தை வரன்முறை செய்திட வேண்டும். ஸ்கோர் கார்டு திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். அனைவருக்கும் சீருடை, அடையாள அட்டை வழங்கிட வேண்டும் பணிக்காலத்தில் இறக்கும் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையாக வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.