முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் சந்திப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் சந்திப்பு
x

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சந்தித்து 9 அம்ச கோரிக்கை மனுவை அளித்தனர்.

சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

அப்போது அவர்கள், மகளிருக்கு உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தனர். 'இந்தியா' கூட்டணி சார்பில் அகில இந்திய அளவில் 5 முக்கிய நகரங்களில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி மாநாடு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார். எனவே சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை 'இந்தியா கூட்டணி' சார்பில் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டனர்.

வாச்சாத்தி வழக்கு

பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 9 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

* வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, நிரந்தர வீடு மற்றும் வாச்சாத்தி கிராமத்தை மேம்படுத்த வேண்டும். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க மின்சார வாரியத்தின் நிலை கட்டண உயர்வு, 'பீக் அவர்' கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும்.

* நீண்ட காலமாக சிறையில் உள்ள 36 முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

* அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள் கோரிக்கையை...

* பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

* அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

* மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 'கேங் மேன்' பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

* நெல்லை மாவட்டம் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் பள்ளி படிப்பை தொடரவும், அவர்கள் குடும்பத்துக்கு அரசு வீடும், வேலையும் வழங்க வேண்டும். சந்திரா செல்விக்கு தமிழ்நாடு அரசின் வீர தீர சாகச செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story