சென்னையில் நாளை மறுநாள் 2 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்


சென்னையில் நாளை மறுநாள் 2 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
x

சென்னையில் நாளை மறுநாள் 2 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

சென்னை,

சென்னையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 37-வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் ஒரு வார்டுக்கு ஒரு நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம் என மொத்தம் 10 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் இதுவரை 36 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 42 லட்சத்து 61 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55 லட்சத்து 52 ஆயிரத்து 580 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 48 லட்சத்து 39 ஆயிரத்து 813 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 792 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 81 ஆயிரத்து 340 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 655 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 1,010 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 42 லட்சத்து 35 ஆயிரத்து 939 பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தகுதியுடையுடன் உள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 42 பேருக்கு இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி வருகிற 30-ந்தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். அதன்படி தற்போது 14 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும், முகாமில் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story