"மேகதாது விவகாரம்; கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்" - வைகோ


மேகதாது விவகாரம்; கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் - வைகோ
x

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், மேட்டூர் அணை மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளை கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்தனர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் எஸ்.கே.ஹல்தர், ஜூலை 23-ந்தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். அவர், மறைமுகமாக அல்ல, பா.ஜ.க. அரசின் அறிவுறுத்தலின்பேரில், நேரடியாகவே கர்நாடகத்திற்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது.

கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 லட்சம் ஹெக்டேரில் இருந்து 38.25 லட்சம் ஹெக்டேராக பரந்து விரிந்து கொண்டே போகின்றது. ஆனால் தமிழ்நாடு கடந்த 48 ஆண்டுகளில் மொத்தம் 15.87 லட்சம் ஹெக்டேர் அளவு சாகுபடிப் பரப்பை இழந்து விட்டது. கர்நாடகம் மாநிலம் பல்வேறு புதிய புதிய பாசனத் திட்டங்களுக்கு காவிரி நீரை கொண்டு போகின்றது என்பதை மறுக்க முடியாது.

மேகதாது அணை குறித்து விவாதிப்போம் என்று, காவிரிப் படுகைக்கு வந்து எஸ்.கே.ஹல்தர் கூறி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story