சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு..!
சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. வலுவான இரு அணிகள் போட்டியிடுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரெயில் சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேளச்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையை இரவு 11.15 மணிக்கு அடையும். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு வேளச்சேரியை நள்ளிரவு 12.05 மணிக்கு அடையும். ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவையும் நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசினர்தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி, மெட்ரோ ரெயில் பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.