நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
மின்சார உபகரணங்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணி நடந்து வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி- டி.எம்.எஸ்., நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரெயில் வழக்கம்போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொழில் நுட்ப வல்லுனர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.