மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 268 கன அடியாக சரிவு
ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
மேட்டூர்,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசலில் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஒகேனக்கல்லுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் நேற்று 10 கி.மீ. தூரத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் வினாடிக்கு அணைக்கு நேற்று காலை 10 ஆயிரத்து 212 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 8 ஆயிரத்து 268 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 109.89 அடியாக இருந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 109.62 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.