மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 879 கன அடியாக சரிவு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 879 கன அடியாக சரிவு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 879 கன அடியாக குறைந்துள்ளது.

நங்கவள்ளி,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 5 ஆயிரத்து 779 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரத்து 342 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6 ஆயிரத்து 53 கன அடியாக சரிந்தது. இன்று மேலும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 879 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

நேற்று காலை 65.30 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 63.86 அடியாக சரிந்தது. ஒரே நாளில் 2 அடி குறைந்து விட்டது. நீர் இருப்பு 27.64 டி.எம்.சி.யாக உள்ளது.


Next Story