மிக்ஜம் புயல் பாதிப்பு: இன்று பார்வையிடுகிறார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்..!
சென்னை வரும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை,
மிக்ஜம் புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்யவுள்ளது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று (வியாழக்கிழமை) சென்னைக்கு வருகிறார். இதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் ராஜ்நாத் சிங்குடன் செல்கின்றனர். ஆய்வுக்கு பின்னர் பிற்பகல் 1.20 மணியில் இருந்து 1.30 மணி வரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
அதன்பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி காட்டப்படுகிறது.