கோயம்பேடு பஸ்நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு: டிரைவர், கண்டக்டரிடம் ரகளை செய்த போதை கும்பல்


கோயம்பேடு பஸ்நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு: டிரைவர், கண்டக்டரிடம் ரகளை செய்த போதை கும்பல்
x

கோயம்பேடு பஸ்நிலையத்தில் நள்ளிரவில் டிரைவர், கண்டக்டரிடம் ரகளை செய்து தாக்கிய போதை கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிற்கும் 2-வது பிளாட்பாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் பஸ்சில் ஏறிய 4 நபர்கள் நேரமாகிவிட்டது பஸ்சை உடனடியாக எடுங்கள் என்று கூறி கண்டக்டர், டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவர் பஸ் புறப்படுவதற்கு இன்னும் நேரம் உள்ளது என கூறியதையடுத்து, 4 பேரும் தொடர்ந்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து சத்தம் கேட்டு மற்ற பஸ்களில் இருந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் அங்கு விரைந்து வந்து போதை ஆசாமிகளை தட்டி கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அருணாச்சலம் என்ற கண்டக்டரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது பற்றி அறிந்ததும் பஸ்நிலையத்தில் இருந்த மற்ற பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் பஸ்களை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரகளையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யும் வரை அரசு பஸ்களை இயக்க மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் நள்ளிரவில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட கோயம்பேடு உதவி போலீஸ் கமிஷனர் ரமேஷ்பாபு, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், அதிகாலை 2 மணியளவில் பஸ்களை இயக்க ஆரம்பித்தனர். இதைத்தொடர்ந்து, பஸ்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை சேர்ந்த ஜாக்கி (வயது 21), பிரகாஷ் (25), செல்வா (21), மணி (21), ஆகிய 4 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் போதை கும்பல் அட்டகாசம் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பஸ்கள் இயக்கப்படாததால் கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story