ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம்?


ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம்?
x
தினத்தந்தி 8 Feb 2024 5:21 AM GMT (Updated: 8 Feb 2024 7:09 AM GMT)

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்குவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து ரூ.6 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நேரடியாக ரொக்கப் பணம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. நிவாரண தொகை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம் வழக்கப்பட உள்ளது.கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு நிவாரணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story