ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?


ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
x

ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து டீ கடைக்காரர், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்

வெண்மை புரட்சி

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

விலை உயர்வு

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக (ரூ.12 உயர்வு) உயர்த்தியிருக்கிறது.பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் கருத்து

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பால் முகவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 580 பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோருக்கும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யவும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பால் விலை உயர்வு தொடர்பாக நாமக்கல் மாவட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கூடுதலாக ரூ.60 செலவாகிறது

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெருமாள் :-

தமிழக அரசிடம் நாங்கள் பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமைபாலுக்கு ரூ.51-ம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தி உள்ளது.அதுவும் கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத இதர சத்துகளை கணக்கிடும்போது, உற்பத்தியாளர்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது. தனியாரிடம் கொடுத்தால் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.5 வீதம் கூடுதலாக கிடைக்கிறது.

அதே சமயம் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு நிற பாக்கெட்டு விலையை ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தி உள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் நலிவடைந்து வரும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு தீவன விலை உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாமக்கல்லை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் நரசிம்மன்:-

நான் எனது கடைக்கு தினசரி 5 லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கி வருகிறேன். தற்போது அரசு பால் விலையை உயர்த்தி இருப்பதால், தினசரி எனக்கு கூடுதலாக ரூ.60 செலவாகிறது. ஒரு மாதத்திற்கு ரூ.1,800 வரை கூடுதல் செலவாகும்.

இதேபோல் கியாஸ் விலையும் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. எனவே தற்போது விற்பனை செய்யப்படும் டீ விலையை ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆக உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அரசு பச்சை நிற பாக்கெட் விலையை உயர்த்தவில்லை என கூறுகிறது. அதில் சத்துக்கள் குறைவாக இருப்பதால், அதை வாங்கி பயன்படுத்த முடியாது. பெரும்பாலும் வீடுகளிலும் தயிர் போடும் நபர்களும் அதை பயன்படுத்த மாட்டார்கள்.

ஏழை, நடுத்தரவாசிகள் பாதிப்பு

கந்தம்பாளையத்தை சேர்ந்த தஹாசின் பானு :-

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் விலையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் மிகுந்த பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள். மேலும் டீக்கடைகளில் டீ, காபி உள்ளிட்டவைகளின் விலை அதிகரிக்கும்.

இதேபோன்று தயிர், வெண்ணை, நெய் போன்ற பால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இந்த பால் பொருட்கள் விலை உயர்வை தடுக்க ஆவின் நிர்வாகம் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை குறைக்க வேண்டும். தினமும் பால் வாங்கும் எங்களுக்கு ரூ.12 உயர்த்தி விட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தி வழங்கி இருப்பது ஏற்புடையது அல்ல.

பா.ஜனதா மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்தி :-

தமிழகத்தில் சொத்துவரி மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பால் விலையும் (ஆரஞ்சு நிற பாக்கெட்) உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மத்திய அரசு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்பட கூடாது என்பதற்காக தான் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளித்து உள்ளது. எனவே பால் விலை உயர்வை தி.மு.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க வணிகரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலை மட்டும் உயர்த்தப்பட்டு உள்ளது என்கிறார்கள். ஆனால் இந்த பாக்கெட்டுகளை தான் டீக்கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story