விதிமுறைமீறி கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை


விதிமுறைமீறி கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை
x

விதிமுறைமீறி கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு

விதிமுறைமீறி கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விதிமுறை மீறல்

ஈரோட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் பட்டா கேட்டு கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடம் பாறையாக இருந்ததால் மாற்று இடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தந்த கிராமங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விதிமுறைகளை மீறி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுதொடர்பாக கட்டிட என்ஜினீயர்கள் உள்பட கட்டிட கலையில் உள்ளவர்களிடம் இருந்து எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம். அந்த விளக்கம் வந்த பிறகு அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளார்கள்.

இதையடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, பிரச்சினைகள் குறித்து விளக்கம் கேட்போம். அதில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களில் செய்யக்கூடிய மாற்றங்கள், செய்ய முடியாதது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆலோசனை

இனிவரும் காலங்களில் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கட்டப்படாது. அதற்கு என்ஜினீயர்களுக்கு பொறுப்பு உள்ளது. பொதுமக்களுக்கும் அதுதொடர்பாக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. 1999-ம் ஆண்டில் இருந்து 3 முறை கோர்ட்டு உத்தரவு வந்துள்ளது. அதுவும் மக்களை சென்றடையவில்லை. இனிமேல் அனுமதியில்லாத கட்டிடமே வரக்கூடாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் கட்டியபோது இருந்த விதிமுறைகளில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. எனவே மீண்டும் கோர்ட்டை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.

எச்சரிக்கை

இனிமேல் யாரும் பாதிக்கக்கூடாத வகையில் ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஆலோசனை பெற்று வழக்கு தாக்கல் செய்யப்படும். ஏற்கனவே கட்டிடம் கட்டி உள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டும். இனிமேல் விதிமீறிய கட்டிடமும் வரக்கூடாது. வரைபட அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டால் இடித்து அகற்றப்படும்.

சென்னையில் சுமார் 270 கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்து உள்ளோம். அதில் 9 கட்டிடங்களில் குறைபாடு இருந்தது அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கட்டிடங்களுக்கான அனுமதியை நிறுத்தி வைத்து உள்ளோம். அதை சரிசெய்த பிறகுதான் அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story