போதை மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை- ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


போதை மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை- ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

போதை மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

போதை மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஆய்வு கூட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கக்கோரியும் அமைச்சர் அறிவுறுத்தினார். அதைத்தொடா்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர் நிலைகளுக்கு நீர் நிரப்பும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக இதுவரை ரூ.1,624 கோடியே 73 லட்சம் செலவிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி முதல் சோதனை தொடங்கப்பட்டு, 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதான குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

தற்போது 99 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஈரோட்டில் போதை மாத்திரை பயன்படுத்தி விற்றதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போதை மாத்திரை பயன்படுத்துவது, கள்ளச்சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சரும், டி.ஜி.பி.யும் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சீரமைப்பு பணி

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் குறித்த பிரச்சினையில் விவசாயிகள் 2 தரப்பினர்களாக உள்ளனர். நாங்கள் யாருக்கும் துணையாக இல்லை. அவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ்ராவ், பயிற்சி கலெக்டர் காயத்ரி, அத்திக்கடவு-அவினாசி திட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் மன்மதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் தங்கரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story