சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை


சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை
x

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையின் முக்கிய சாலைகளில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டி.எம்.எஸ். வளாகம் அருகே பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை அகற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்தவாறு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக போலீசார் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோரிக்கை குறித்து, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசு தேர்வாணையம் ஆகிய துறைகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். தனியாக மாற்றுத்திறனாளிகள் துறை மட்டும் முடிவெடுக்க முடியாது. எனவே, வரும் 23-ந்தேதி இந்த துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.


Next Story