சென்னை மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்காக நடமாடும் இதய பரிசோதனை மைய பஸ் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்


சென்னை மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்காக நடமாடும் இதய பரிசோதனை மைய பஸ் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
x

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வசதியாக நடமாடும் இதய பரிசோதனை மைய பஸ்சை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை

இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை நாளுக்குநாள் பெருகி வருகிறது. இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள சென்னை, மெட்ராஸ் ஆதித்யா ரோட்டரி கிளப் மற்றும் போரூர், ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நடமாடும் இதய பரிசோதனை மைய பஸ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்சில் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய 2 டிஜிட்டல் இ.சி.ஜி., 2 எக்கோ எந்திரங்கள் மற்றும் தானியங்கி ரத்த மாதிரி கருவிகள் உள்ளன. இந்தப் பஸ் மூலம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட நகர்ப்புற சுகாதார மையங்களில் முகாம்கள் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமானது ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தொழில்முறை இதய நிபுணர், ஆய்வக நுட்புனர்களைக் கொண்டு நடத்தப்படும். பரிசோதனையின் போது மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது ஸ்ரீராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கோ அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுவார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களின் அருகில் நடைபெறும் போது, இம்மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் ராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் தேனாம்பேட்டை (மெரினா) ஆகிய மண்டலங்களில் 372 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள கழிப்பறைகள், சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1 ஆண்டுக்கு கட்டுமானப் பணி மற்றும் 8 ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்பை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிகளில், மேயர் ஆர்.பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story