செம்மண் குவாரி வழக்கில்விழுப்புரம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி ஆஜர்மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு


செம்மண் குவாரி வழக்கில்விழுப்புரம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி ஆஜர்மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:45 PM GMT)

செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி ஆஜரானார். இவ்வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சியின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

பிறழ் சாட்சியம்

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 6 பேர் ஆஜராகினர். பொன்.கவுதமசிகாமணி எம்.பி. ஆஜராகவில்லை.

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 2-வது சாட்சியாக, அப்போதைய பூத்துறை கிராம நிர்வாக அலுவலரும், தற்போது அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவருமான விஜயகுமாரன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது, இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களில் நான் எப்போது கையெழுத்திட்டேன் என்பதே எனக்கு தெரியவில்லை என விஜயகுமாரன் பிறழ்சாட்சியம் அளித்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

பின்னர் அவரிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். அவரை தொடர்ந்து எதிர்தரப்பு வக்கீல் வித்யாசங்கர் குறுக்கு விசாரணை செய்தார்.

தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

ஏற்கனவே இவ்வழக்கில் அரசு தரப்பின் முதல் சாட்சியான ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்திருந்த நிலையில் தற்போது ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரனும் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story