வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்


வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
x

2023 ஆம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

சென்னை,

"தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8 ஆம் நாளைத் "தமிழ் அகராதியியல் நாள் விழா"வாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, "தமிழ் அகராதியியல் நாள் விழா" கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (08.11.2023) சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்று, 35 பேருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "தூயதமிழ்ப் பற்றாளர் விருதும்", தென்மொழி - திங்களிதழ் சார்பாக முனைவர் மா. பூங்குன்றனுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "தூயதமிழ் ஊடக விருதும்" மரபுக்கவிதை பிரிவில் ப. எழில்வாணன் மற்றும் புதுக்கவிதை பிரிவில் ம. சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "நற்றமிழ்ப் பாவலர் விருதும்" என மொத்தம் 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான "அகராதி ஆய்வு மலர்", "வட்டார வழக்குச் சொற்பொருள் அகராதி", "மருத்துவக் கலைச்சொல் அகராதி", "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் திருந்திய பதிப்பு (7 தொகுதிகள்), பன்மொழி அகராதியுடன் கூடிய குறுஞ்செயலி ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்பித்தார்.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ந. அருள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குனர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.


Next Story