தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல், புனரமைத்தலுக்கான நிதியுதவி - ஆலய நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்


தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல், புனரமைத்தலுக்கான நிதியுதவி - ஆலய நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
x

தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தலுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆலய நிர்வாகிகளிடம் நிதியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

சென்னை

தமிழ்நாட்டில் தொன்மையான தேவாலயங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தலுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டு ரூ.6 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது. 2023-2024-ம் ஆண்டு இத்திட்டத்திற்கென நிதி உயர்த்தப்பட்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை, தலைமைச்செயலகத்தில் நேற்று இத்திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கான முதல் தவணை தொகைக்கான (50 சதவீதம்) காசோலைகளை 4 தேவாலயங்களுக்கு வழங்கினார்.

அதன்படி, சென்னை வெஸ்லி தேவாலயம் (ரூ.59.40 லட்சம்), செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர் மலை தேசிய திருத்தலம் (ரூ.74.63 லட்சம்), கன்னியாகுமரி புனித சேவியர் தேவாலயம் (ரூ.1.14 கோடி) மற்றும் திருநெல்வேலி கால்டுவெல் நினைவு இல்ல தேவாலயம் (ரூ.51.55 லட்சம்) ஆகிய தேவாலய நிர்வாகிகளிடம் நிதிக்கான காசோலைகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், சிறுபான்மையினர் நல இயக்குனர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story