அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்யவில்லை - அமலாக்கத்துறை தகவல்


அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்யவில்லை - அமலாக்கத்துறை தகவல்
x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை இன்னும் கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய நீதிமன்ற காவல் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேவேளை, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அசோக் குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொச்சியில் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

4 முறை சம்மன் அனுப்பியும் அசோக் குமார் விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி உள்ளிட்டோரும் பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக கருதுவதால் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Next Story