கபாலீஸ்வரர் கோவிலில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்


கபாலீஸ்வரர் கோவிலில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
x

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை,

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.18 லட்சம் செலவில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் காற்றில் இருந்து ஈரப்பதத்தை பெற்று அதை பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு எந்திரத்தை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம்.

ஒரு நாளைக்கு 500 லிட்டர் தண்ணீர் இதன் மூலம் உற்பத்தியாகின்றது. உடலுக்கு நல்லதொரு ஆரோக்கியத்தை தருகின்றதாகவும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகவும் பெறப்படுவதால் பக்தர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.

இந்த எந்திரம் தொடர்ந்து நல்ல பயனை தருமானால் முதுநிலை கோவில்கள் அனைத்திலும் இதுபோன்ற எந்திரத்தை நிறுவ இந்து சமய அறநிலைத்துறை முயற்சி எடுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் நோட்டீஸூக்கு விளக்கமளிக்க ஆகஸ்ட் மாதம் 2-வது வாரம் வரை நடராஜர் கோவில் நிர்வாகம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், அரசும் அவகாசம் தந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்கள் தரும் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.


Next Story