தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அஞ்சலி
பரமக்குடியில் தியாகி இ்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பரமக்குடி,
பரமக்குடியில் தியாகி இ்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நினைவுதினம் அனுசரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 66-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி, கயல்விழி, ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. முருகேசன், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை ெதாகுதி எம்.எல்.ஏ.வுமான தமிழரசி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பிரமுகர்கள்
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் கருப்பையா, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாநில தீர்மான குழு துணை தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணைத் தலைவரும் பொதுக்குழுஉறுப்பினருமான வக்கீல் பூமி நாதன், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன், போகலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கதிரவன், பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பரமக்குடி நகர் துணைச்செயலாளர் மும்மூர்த்தி, வட்ட செயலாளர்கள் வாணி குமரன், ராஜபதி, சேது அருண்குமார், மகேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரபா சாலமன், துரை.கனிமொழி, ராதா பூசத்துரை, வக்கீல் சங்கர், இசை வேளாளர் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நயினார் கோவில் அரசுமணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மணிமண்டபம்
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தியாகி இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். முதல்-அமைச்சருக்கு, இமானுவேல் சேகரனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். தியாகி இமானுவேல் சேகரன் சமூக நீதியை பாதுகாக்க போராடினார். அதை நிலை நாட்டும் வகையில் நாம் அனைவரும் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் பேட்டி
பின்னர் பரமக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு, ஒரே தேர்தலை கருணாநிதி எப்போது ஆதரித்தார்?. இந்த தேர்தல் முறையை எடப்பாடி பழனிசாமி முதலில் எதிர்த்தார். அதற்கு என்ன சொல்வது? பேட்டி கூட கொடுக்காமல் வெறும் கடிதம் மூலமாக எதிர்ப்பை தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? சமீபத்தில்தான் கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தது. அங்கு ஆட்சி கவிழாதா?. இது போல் வேறு இடங்களில் ஆட்சிகள் கவிழாதா?. இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன. 7½ லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு பதில் சொல்ல முடியாமல் தினம் தினம் ஒவ்வொரு பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன் என்று மோடி சொன்னார். அது போல பெயரை மாற்றிவிட்டார். அதற்கு வாழ்த்துக்கள் கூறுகிறேன்.
சனாதனம்
சனாதனத்தை விட்டு விடுங்கள். அதனை 200 வருடங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். கொள்கைக்காக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க.. ஆட்சி அதற்கு அடுத்ததுதான். அதைவிட முக்கியம், சமூக நீதி. அதுதொடர்பாக தொடர்ந்து பேசுவேன்.
சனாதனம் குறித்து அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி, திருமாவளவன் போன்ற யாரும் பேசாததை நான் பேசவில்லை. அவர்களைவிட குறைவாகத்தான் நான் பேசி இருக்கிறேன். நான் பேச ஆரம்பித்து இருக்கிறேன். அதனை எல்லோரும் பேச வேண்டும். அதைவிட முக்கியமாக 2024 தேர்தலில் பாசிச பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 7½ லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும். மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. 300-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. முதலில் அதைப் பற்றி பேசுவோம், அதன் பிறகு சனாதனத்தை பற்றி பேசுவோம். சனாதனத்தை பற்றி சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் பேசினேன். எது முக்கியமோ, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.