சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை - அமைச்சர்கள் வழங்கினர்


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை - அமைச்சர்கள் வழங்கினர்
x

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் 281 சென்னை பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 38 சென்னை உயர்நிலைப்பள்ளிகளும், 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. சென்னைப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மாநகராட்சி நிதியிலிருந்து கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் படித்து தற்சமயம் மருத்துவம் படிக்கும் 2 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரமும், என்ஜினீயரிங் படிக்கும் 120 பேருக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.54 லட்சமும், பட்டப்படிப்பு படிக்கும் 129 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.7 ஆயிரம் வீதம் ரூ.9 லட்சத்து 3 ஆயிரமும், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி படிக்கும் 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரமும், டிப்ளமோ படிக்கும் 23 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.7 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரமும், சட்டம் படிக்கும் 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரமும், ஒருங்கிணைந்த படிப்பு படிக்கும் 5 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் என 285 மாணவ-மாணவிகளுக்கு ரூ.67 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இணைந்து காசோலையாக வழங்கினர்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 12 கல்வியாண்டுகளில் இதுவரை 7 ஆயிரத்து 254 மாணவ-மாணவிகளுக்கு ரூ.16 கோடியே 44 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, துணைமேயர் மு.மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் கும்மாளம்மன் கோயில் தெருவில், மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கே.என்.நேரு திறந்து வைத்தார்.


Next Story