'மிக்ஜம்' புயல் : மின் விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


மிக்ஜம் புயல் : மின் விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 3 Dec 2023 12:27 AM IST (Updated: 3 Dec 2023 5:56 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில்,

வங்கக்கடலில் மிக்ஜம் புயல் உருவாகி உள்ள நிலையில், ஏற்கனவே கடந்த நவம்பர் 29-ந் தேதி மாலை சில மணி நேரம் மட்டுமே பெய்த மழையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அடுத்து தாக்கவிருக்கும் புயலால் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ? என்ற அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.

எனவே காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளைத் தடுக்க போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த நவம்பர் 29-ந் தேதி பெய்த மழையில் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். மிக்ஜம் புயல் மழை காலத்தில் மின்கசிவு, மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story