'நீட்' தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்-ஆ.ராசா எம்.பி. பேச்சு


நீட் தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்-ஆ.ராசா எம்.பி. பேச்சு
x

‘நீட்’ தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என உண்ணாவிரத போராட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கூறினார்.

பெரம்பலூர்

உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவற்றின் சார்பில் மாணவர்களை மட்டுமின்றி, பெற்றோர்களையும் மரணக்குழியில் தள்ளும் 'நீட்' தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்தும், பொறுப்பற்ற தமிழக கவர்னரை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.

'நீட்' தேர்வு ரத்து

போராட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசும்போது கூறியதாவது:- 'நீட்' தேர்வு ரத்து செய்யக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 'நீட்' தேர்வால் 17 மாணவர்களை இழந்துள்ளோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கூடிய இடத்தில் ஒரு பிரதமர் இருப்பார். அந்த பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். இந்தியாவிற்கான விடியலை தமிழக முதல்-அமைச்சரால் மட்டுமே கொடுக்க முடியும். இந்த 'நீட்' தேர்வை வரக்கூடிய மத்திய அரசால் ரத்து செய்யப்படும். அதற்கான வேலையை நாம் செய்வோம்.

மணிப்பூர் கலவரம்

'நீட்' தேர்வு ரத்து செய்ய ஜனாதிபதி கையெழுத்திட்டாலும், அந்த கோப்புக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறும் கவர்னர் ஆர்.என்.ரவியை இந்த அரசாங்கம் வைத்திருக்கும் என்று சொன்னால் அரசியலமைப்பு சட்டத்தின் மீது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் அக்கறை இல்லை. தர்பார் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்றனர். மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கூட கேட்கவில்லை. இதனால் பா.ஜனதா கட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் மோடியும், அமித்ஷாவையும் வீட்டிற்கும் அனுப்பக்கூடிய தேர்தலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலையில் தி.மு.க.வினர் தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையில் ராசா எம்.பி. பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story