"மோடி பயந்து விட்டார்"... "அவருக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிடுச்சு" - ஆர்.எஸ்.பாரதி கருத்து
பிரதமர் மோடியின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
நெல்லை,
நெல்லையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாட்னா எதிர்க்கட்சி கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி பயந்துபோய் இருக்கிறார். அதனால் தான் இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்கிறார். பாஜக வலிமையாக இருந்தால் ஏன் மற்ற கட்சிகளை உடைக்க வேண்டும். மராட்டியத்தில் கேவலமான விளையாட்டை மோடி அரசு விளையாடி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது. கர்நாடகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணித்தார்கள். கர்நாடகாவில் பாஜகவிற்கு மக்கள் எப்படி பாடம் புகட்டினார்களோ அதைவிட பயங்கரமான முடிவை மராட்டிய மக்கள் 2024ல் அளிப்பார்கள்.
அரசியல் பூகம்பங்கள் வந்தாலும், எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அண்ணாமலை வந்தாலும் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் தி.மு.க.வில் உள்ளனர். தமிழக கவர்னர் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசி வருகிறார். தமிழகம் பெரியார் பிறந்த மண், அண்ணாவால் வளர்ந்த மண், கலைஞரால் பாதுகாக்கப்பட்ட மண், இங்கு சனாதனத்திற்கு கடுகளவும் இடம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.