பாமர, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் கிடைக்க செய்தவர் மோடி- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்


பாமர, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் கிடைக்க செய்தவர் மோடி- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
x

70 ஆண்டுகளாக மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த பத்ம விருதுகளை பாமர, சாமானிய மக்களுக்கும் கிடைக்க செய்தவர் மோடி என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புத்தக அறிமுக விழா

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் 'மோடி @ 20' என்ற புத்தகம் அறிமுக விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், இந்து நாளிதழ் தலைவர் மாலினி பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புத்தகத்தை அறிமுகப்படுத்திய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பின்னர் பேசியதாவது:-

சொன்னதை செய்பவர்

சொன்னதை செய்பவர் மோடி. அதனால் தான் மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்வு செய்கின்றனர். முன்னேறிய நாடுகளுக்கு இணையாக தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. தற்போது 200 கோடி மக்களுக்கு தடுப்பூசியை கொடுத்து விட்டோம்.

மோடி குறுகிய மனப்பான்மையோடு எப்போதும் செயல்படவில்லை. ஏழை மக்கள் வங்கி கணக்கில் பணம் இருக்காது என ஏளனம் செய்தனர். தற்போது அந்த வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பணம் வைத்துள்ளனர்.

பத்ம விருதுகள்

அடிப்படையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருப்பதாக மோடி தெரிவித்தார். அதன்படியே 70 ஆண்டுகளாக மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்த பத்ம விருதுகள், தற்போது பாமர மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் வகையில் பத்ம விருதுகளை வழங்கி உள்ளார். இதுதான் அடிப்படை மாற்றத்துக்கான உதாரணம்.

உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. காமராஜர் கனவையும் மோடி நினைவாக்குகிறார். "என்ன இல்லை இந்த திரு நாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்(பாடலை பாடினார்)" என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்பவும் முன்னேற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி, பா.ஜ.க. பிரமுகர்கள் காயத்ரி ரகுராம், லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story