ஓசூரில் துணிகரம்:தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர்
ஓசூரில் தொழில் அதிபர் வீட்டில் லாக்கரை கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் ரூ.25 லட்சத்தை ெகாள்ளையடித்து சென்றனர். அவர்களை ேபாலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழில் அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் உசேன் (வயது50). தொழில் அதிபர். இவர், வீட்டு அருகில் பேப்ரிகேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது பேரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் உசேன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மற்றும் பேரனுடன் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.25 லட்சம், 2 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
வலைவீச்சு
வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடப்பாரையால் கதவு மற்றும் லாக்கரை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உசேன், ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அது பழுதடைந்து இருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.