அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

உண்டியல் உடைப்பு

நித்திரவிளை அருகே உள்ள வைக்கல்லூர் நெடும்புறம் பகுதியில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் மாலை வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றார்.

பின்னர் நேற்று காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பகுதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே கோவில் நிர்வாகத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

மர்ம நபர் உருவம் சிக்கியது

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். அதில் கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்மநபர் கோவிலை சுற்றி வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை திசை திருப்பி வைத்துள்ளார். பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மர்ம ஆசாமியின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story