திருத்தணி முருகன் கோவிலில் குரங்குகள் அட்டகாசம் - பக்தர்கள் தரிசனம் ரத்து


திருத்தணி முருகன் கோவிலில் குரங்குகள் அட்டகாசம் - பக்தர்கள் தரிசனம் ரத்து
x

திருத்தணி முருகன் கோவிலில் மூலவர் சன்னதி வரை சென்று குரங்குகள் அட்டகாசம் செய்தது. இதனால் பக்தர்கள் தரிசனம் ஒரு மணி நேரம் ரத்துசெய்யப்பட்டது.

திருவள்ளூர்

முருகனின் அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக போற்றப்படுவது திருத்தணி முருகன் கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். தற்போது இந்த கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் உணவு பொருட்களை குரங்கள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது. சமீப நாட்களாக கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்தநாள் என்பதால் காலையிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வர தொடங்கினர். காலை 7:30 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோவில் வளாகத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் திடீரென மூலவர் சன்னிதானத்தில் புகுந்து விட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். கோவில் ஊழியர்கள் குரங்குகளை துரத்த முயன்றபோது கடும் கோபத்துடன் சீறி பாய்ந்து அட்டகாசம் செய்தது. இதனால் ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

உடனடியாக கோவில் ஊழியர்கள் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை பத்திரமாக வெளியில் அனுப்பிவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து மூலவர் சன்னதியில் அமர்ந்திருந்த குரங்குகளை கோவிலுக்கு வெளியே விரட்டினர். குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பக்தர்கள் தரிசனம் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் எனவே கோவில் நிர்வாகம் குரங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மூலவர் சன்னதியில் குரங்குகள் புகுந்த சம்பவத்தால் மலைக்கோவில் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story