வால்பாறையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
வால்பாறையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
வால்பாறை
வால்பாறை பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான கால சூழ்நிலை ஏற்பட்டு அவ்வப்போது இரவில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் வால்பாறை பகுதி முழுவதும் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் வால்பாறை நகர் பகுதியிலும் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும், நகராட்சி அலுவலகம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கபசுரகுடிநீர் விநியோகம் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் துப்புரவு பணியாளர்கள் சென்று டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கையாக குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்வது, சாக்கடை கழிவுநீர் தேங்காமல் பாதுகாப்புக் கொள்வது போன்ற அனைத்து விதமான நோய் தடுப்பு பணிகளையும் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.