25-க்கும் மேற்பட்ட மாதிரி விமானங்களைதயாரித்த மாணவர்கள்
ஆலங்குடி அரசு பள்ளியில் நடைபெற்ற பயிற்சி பட்டறை நிறைவு விழாவில் 25-க்கும் மேற்பட்ட மாதிரி விமானங்களை தயாரித்த மாணவர்களுடன் அமைச்சர் மெய்யநாதன் வானில் பறக்க விட்டு அசத்தினார்.
மாதிரி விமானங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் மற்றும் திருச்சி தனியார் ஏரோமாடலிங் இணைந்து 3 நாட்கள் பயிற்சி பட்டறை முகாம் நடத்தியது. பள்ளியின் கணினி ஆசிரியர் ஏரோ மாடலிங் பொறுப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், நகர செயலாளர் பழனிகுமார், கிருஷ்ணமூர்த்தி, அமுதா, ரெங்கசாமி, சுப்ரமணியன், லூர்துநாதன், கருணாஸ், செங்கோல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விமானம் எவ்வாறு வானில் பறக்கிறது, அதற்கு தேவையான மூலக்கூறுகள் என்னென்ன, ஏரோ மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல் வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் 3 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் 25-க்கும் மேற்பட்ட மாதிரி விமானங்களை தயாரித்தனர்.
வானில் பறக்க விட்டு அசத்தல்
இந்நிலையில் நேற்று பயிற்சி பட்டறை நிறைவு விழா மற்றும் பயிற்சியில் செய்யப்பட்ட மாதிரி விமானம் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பயிற்சி பட்டறையில் தயாரிக்கப்பட்ட விமான மாதிரியை மாணவர்கள் முன்னிலையில் வானில் பறக்க விட்டு உற்சாகப்படுத்தினார். மேலும் இந்த பயிற்சி பட்டறையில் பங்கெடுத்து பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்தியாவிற்கே பெருமை
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், சந்திரயான்- 3 வெற்றியை கைத்தட்டி கொண்டாடினோம். இந்தியாவில் இப்படி ஒரு சாதனை நிகழ்த்தியதன் மூலமாக உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்திருக்கிறது. அந்த பெருமையை அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல். சந்திரயான்-3 திட்ட இயக்குனராக இருந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெரிய பெருமை என்றாலும், அப்படிப்பட்ட விஞ்ஞானிகளை உருவாக்குகின்ற முதல் கட்டம் தான் இந்த ஏரோமாடலின் பயிற்சி பட்டறை. இந்த பயிற்சியை வெற்றிகரமாக மாணவர்கள் செயல்படுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் விமானத்தை உருவாக்கியுள்ளனர் என்றால் அது மிகப்பெரிய பெருமையை தேடி தரக்கூடியதாகும். விமானம் பறந்து போகின்றது என்று பார்க்காமல், விமானத்தை உருவாக்க கூடியவர்களாக மாணவர்கள் உயர வேண்டும் என்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்