மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு


மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை

மக்கள் குறைதீர்க்கும் நாள்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கிகடன், உபகரணங்கள், அடிப்படை வசதி கோரி மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் என மொத்தம் 330 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவிகள்

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் தலா ரூ.9ஆயிரத்து, 50 மதிப்பிலும், காவேரிபூம்பட்டினம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 17 பயனாளிகளுக்கு தலா ரூ.28 ஆயிரம் வீதம் கறவை மாடு வாங்குவதற்கு கடனுதவிக்கான காசோலையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு மின்மோட்டார் பொருந்திய தையல் எந்திரம் தலா ரூ.5 ஆயிரத்து 900 மதிப்பிலும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 800 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, துணைபதிவாளர் நவராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகளிர் உரிமைத்தொகை

அப்போது 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து மாவட்ட கலெக்டரிடம் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பெண்களிடம் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டார். இதனை ஏற்று பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் விண்ணப்பித்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் மறு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story