தாசில்தார் வாகனம் முன்பு அமர்ந்துதாய், மகன் தர்ணா போராட்டம்
10 சென்ட் நிலத்தை வேறொருவர் பெயரில் பட்டா கொடுத்ததாக ஓமலூரில் தாசில்தார் வாகனம் முன்பு அமர்ந்து தாய், மகன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்
தாய்- மகன்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மானத்தாள் ஓலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (வயது 65). இவருடைய மகன் சசிகுமார். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது விவசாய நிலமானது, மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இவர்களுக்கு சொந்தமான நிலம், உபரிநீர் திட்டத்துக்கு எவ்வளவு எடுக்கப்படுகிறது என்பதை கூற வேண்டும். மேலும் தங்களது பெயரில் உள்ள 10 சென்ட் நிலத்தை வேறொருவரது பெயரில் பட்டா மாற்றி கொடுத்துள்ளனர். அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றும் தாயும், மகனும் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
தர்ணா போராட்டம்
அப்போது தாசில்தார் மனுவை வாங்காமல் காத்திருக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாயும், மகனும் ஓமலூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த தாசில்தார் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, அவர்கள் விளைந்த நிலக்கடலையை கொண்டு வந்து அங்கு கொட்டினர். இதனை அறிந்த தாசில்தார் இருவரையும் உடனே அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது உங்களது கோரிக்கை தொடர்பாக அளந்து உடனடியாக தீர்வு காணப்படும் என்றும், அதற்கான அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். அதன்பிறகு தாயும், மகனும் அங்கிருந்து புறப்பட்டு் சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.