கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு


கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
x

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 23). இவர் தனது நண்பர் ஒருவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த முகமது இப்ராகிம் (46) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்த பெருந்துறையில் 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இதில் இப்ராகிம் தனது மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராகுலும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் வந்த அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த கூவத்தூர் போலீசார் இறந்து கிடந்த முகமது இப்ராகிம், ராகுல் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இறந்த முகமது இப்ராகிம் மரக்காணம் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் தினமும் ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்களை அழைக்கும் மத போதகராக இருந்தார்.

அதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து விபத்தில் சிக்கி இறந்த ராகுல் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் சாப்ட்வர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story