கல்வராயன்மலையில் மலைவாழ் பேரவை சங்கம் ஆர்ப்பாட்டம்
வன உரிமை சான்று வழங்கக்கோரி கல்வராயன்மலையில் மலைவாழ் பேரவை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கச்சிராயப்பாளையம்
வன உரிமை சான்று
கல்வராயன்மலையில் 171 கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே வருவாய்த் துறையினர் பட்டா வழங்கியுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு பட்டா வழங்காததால் விவசாயத்துக்காக கிணறு வெட்டவோ, நிலங்களை சீரமைக்க முயன்றாலோ அவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால் சொந்தமாக நிலங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாத நிலையில் மலைவாழ் மக்கள் இருந்து வருகின்றனர். எனவே பல தலைமுறைகளாக தாங்கள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு வன உரிமைச்சான்று கேட்டு வனத்துறையிடம் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், வன உரிமை சான்று வழங்க வேண்டும், பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் கல்வராயன் மலைவாழ் பேரவை சங்கம் சார்பில் மாநில தலைவர் வரதராஜ் தலைமையில் இருந்து தாரைதப்பட்டை, பேண்டு வாத்திய இசையுடன் ஊர்வலம் புறப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து இருந்தனர்.
வெள்ளிமலை பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கல்வராயன்மலை தாலுகா அலுவலகம் முன்பு வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் பேரவை சங்க மாவட்ட தலைவர் ராமசாமி உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு வருவாய் மற்றும் வனத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.