அபராதம் பல மடங்கு அதிகரிப்பு: சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? மக்கள் கருத்து


அபராதம் பல மடங்கு அதிகரிப்பு: சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? மக்கள் கருத்து
x

போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய அபராத நடவடிக்கையால் தமிழ்நாடு சாலைவிபத்தில் முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா என்பது பற்றி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெருகும் வாகனங்கள்... அதிகரிக்கும் விபத்துகள்

நாட்டில் பெருகி வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி செல்வது விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைகிறது.

சாலை விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோய் வருகிறது. உடல் உறுப்புகளை இழந்து பலர் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

தற்போது மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்றால் ரூ.1,000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது புதிய அபராத தொகையை 'இ-சலான்' கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா? இந்தியாவிலேயே சாலைவிபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றிய மக்கள் பார்வை வருமாறு:-

கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்

சென்னை போக்குவரத்து (தெற்கு) போலீஸ் இணை கமிஷனர் ராஜேந்திரன்:-


மது போதையில் வாகனங்கள் ஓட்டுவது அவர்கள் உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் அப்பாவி மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. முன்பு மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களிடம் குறைந்த அளவு அபராத தொகை இருந்தபோது வாகன சோதனையில் அதிகம் பேர் சிக்கினர்.

அபராத தொகை அதிகரித்த பின்னர் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எனவே புதிய அபராத நடைமுறை வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இது சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு கை கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் சு.நதியா:-



கொரோனா காலக்கட்டத்துக்கு பின்னர் கடன், வட்டி, மாத தவணை என பண நெருக்கடி சுமையில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை பல மடங்கு அதிகரித்திருப்பது நிச்சயம் மேலும் சுமையாக தான் இருக்கும்.

எனவே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணத்தை கறப்பதற்கு பதிலாக அவர்களை 1 மணி நேரம் போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சொல்லலாம். சாலைவிதிகளை மதிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அசுர வேகத்துக்கு முட்டுக்கட்டை

புதுப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி சிந்தியா:-


சாலைவிதிகளை மதிக்காமல் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அசுர வேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இந்த அபராத நடவடிக்கை வேகத்தடையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

வெளிநாடுகளை போன்று சாலைவிதிகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடம் மேலோங்கும். இதன் மூலம் சாலைவிபத்துகள் குறையும். மக்களும் அச்சமின்றி சாலையில் நடந்து செல்ல முடியும். ஆம்புலன்சு வாகனங்களுக்கு வழி விட வேண்டும் என்ற விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.

இந்த உத்தரவை நான் வரவேற்கிறேன். போக்குவரத்து போலீசார் இந்த உத்தரவை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலையை முதலில் சீர் செய்யுங்கள்

அண்ணாநகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தர்:-


சென்னை போன்ற பெருநகரத்தில் மக்கள் வாழ்க்கை அவசர ஓட்டமாக இருந்து வருகிறது. காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விட்டால் அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாது. தாமதமாக சென்றால் அதிகாரிகள் வசைபாடுகிறார்கள். எனவே போக்குவரத்து சிக்னலில் சில நேரங்களில் விதியை மீறி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம், கட்டாயம் ஏற்படுகிறது. தற்போது அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எழும்பூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வெலிங்டன்:-


போக்குவரத்து விதிகள் குறித்து மக்களிடம் தொடர் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டாலே சாலைவிபத்துக்களை கட்டுப்படுத்த முடியும். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் திண்டாடும் மக்கள் கழுத்தை நெரிப்பது போன்று புதிய அபராத நடவடிக்கை உள்ளது.

சாலைவிதிகளை கடைபிடிக்காதது மட்டும் தான் விபத்துக்கு வித்திடுக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குண்டும்-குழியுமாக, மேடு-பள்ளமுமாக இருக்கும் சாலைகளில் தடுமாறி எத்தனை விபத்துகள் நடக்கின்றன? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.1,000 அபராதத்துக்கு புதிய 'ஹெல்மெட்' வாங்கி கொடுத்து விடலாமே...

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த என்ஜினீயர் ஈவன் பெர்னட் ராஜ்:-


தமிழகம் மற்ற துறைகளில் முதலிடம் என்பதை நாம் சாதனையாக கருதினாலும், சாலை விபத்தில் முதலிடம் என்பது வேதனைக்குரியதுதான். தற்போது அபராத தொகை அதிகரிப்பு சாலைவிதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வாகன ஓட்டிகள் மனதில் பதிய வைக்கும்.

இதன் மூலம் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவோர்கள் எண்ணிக்கை குறையும். சாலைவிபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையும் என்று நம்புகிறேன்.

'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் ரூ.1,000 அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரூபாய்க்கு தரமான 'ஹெல்மெட்' வாங்கி கொடுத்துவிடலாம். இதன் மூலம் அந்த வாகன ஓட்டி மீண்டும் 'ஹெல்மெட்' அணியாமல் வாகனத்தை ஓட்டமாட்டார். இந்த யோசனையை போக்குவரத்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு


28-ந்தேதி முதல் புதிய அபராத நடைமுறை அமலுக்கு வருவது குறித்து சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்கி நிறுத்தி பாடம் நடத்துவது போன்று அறிவுரையும், எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்.

இதே போன்ற பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.

கனரக வாகனங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்படுமா? ரூ.100 அபராதம் கட்டிவிட்டு நகருக்குள் வலம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக நகருக்குள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தடையை கனரக வாகன ஓட்டுனர்கள் உடைத்தெறிந்து நினைத்த நேரத்தில் நகருக்குள் புகுந்து விடுகின்றனர். போக்குவரத்து போலீசார் இந்த வாகனத்தை மடக்கி ரூ.100 முதல் அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராத தொகையை ஏதோ நகருக்குள் நுழைவதற்கான நுழைவு 'டிக்கெட்' போன்று கனரக வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு இடத்தில் அபராதம் செலுத்திவிட்டால் அந்த ரசீதை கையில் வைத்து நகர் முழுவதையும் சுற்றி வருகின்றனர். மற்றொரு இடத்தில் போக்குவரத்து போலீசார் மடக்கினால் ஏற்கனவே அபராதம் கட்டிய ரசீதை காண்பித்து சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி திண்டாடும் நிலை இருக்கிறது. எனவே தடை விதிக்கப்பட்ட நேரத்தில் நகருக்குள் நுழைய முற்படும் கன ரக வாகனங்களுக்கு அதிகளவில் அபராதம் விதித்து, வாகனத்தை அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும். நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது வாகன ஓட்டிகளின் பொதுமக்களின் மனநிலையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.


Next Story